Wednesday, May 5, 2010

ஆர் கே எஸ் பற்றி அண்ணா கூறிய ஒரு சம்பவம்

திவானின் விருந்தினராகச் சென்ற அண்ணாவை கோவிலுக்குள் விட மறுத்தது ஏன்?அண்ணா கூறிய ஒரு சம்பவம்

சமுதாய மாற்றம் என்பது எவ்வளவு பெரிய அளவுக்கு இன்றைக்கு எளிதாக வந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்னாலே எவ்வளவு சங்கடத்தோடு இருந்தது என்பதற்கு அண்ணா அவர்கள் ஒரு சாட்சியத்தை, ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறார்கள், அந்தப் பொதுக்கூட்டத்திலே.

அண்ணா பேசுகிறார் கேட்போம். மதத்துறையிலே மக்கள் மறுமலர்ச்சி பெற உழைக்க வேண்டும். இது சமயம் மத மமதை ஒன்று என் நினைவிற்கு வருகிறது.

கொச்சி திவான் வீட்டில் அண்ணா

1937ஆம் ஆண்டு நமது சர்.சண்முகம் (ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டுவிழா) கொச்சித் திவானாக கொலு வீற்றிருந்தபொழுது நடந்த சம்பவம் அது. நானும் இன்னும் சிலரும் (அண்ணா அவர்களும், மற்ற நண்பர்களும்) கொச்சிக்குப் போய் கோவை கோமான் வீட்டில் தங்கினோம். (திவான் வீட்டிலே தங்கியிருக்கின்றார்கள்).

மாலையில் அவருடைய மோட்டார் காரிலேயே கோயிலுக்குச் சென்றோம். (குருவாயூர் கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதில் என்ன சிறப்பு என்பதற்காகப் பார்க்கச் செல்லுகிறார்கள்.) அவர் (திவான்) உடன் வரவில்லை. எங்களை கோவிலுக்குள்ளே விட நம்பூதிரி மறுத்தார். நாங்கள் திவான் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறி, சலுகை பெற முயன்றோம். (திவான் வீட்டு விருந்தினர் என்று சொன்னால் உடனே விடுவார்கள் என்பதற்காக சொன்னோம்)

செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை

அதற்கு நம்பூதிரி திவான் வீட்டிற்கு வந்திருப்பதால்தான் எங்களை கோவிலுக்குள் விட மறுத்ததாகவும் திவான், இந்த வகுப்பாரை செட்டிமாரை கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார்.

ஏனென்றால் அவர் வாணியச் செட்டியார். அவர் சூத்திரர். அவர் திவானாக இருக்கலாம். திவான் என்று சொன்னால் முதலமைச்சர்_பிரதம அமைச்சர் மாதிரி நிருவாகத்தை நடத்தக் கூடியவர். அவர்களுடைய விருந்தினர்கள் இவர்கள். திவான் வீட்டிற்கு வந்ததினாலேதான் விடவில்லை என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகின்றார்.

கோயிலுக்குச் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்

அவர் கீழ் ஜாதிக்காரர். ஆகவே கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறினார். அண்ணா விடவில்லை. விவாதம் பண்ணுகிறார்கள், நாங்கள் அவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும் எங்கள் ஊரில் கோயிலுக்குள் செல்லும் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் என்று கூறி உள்ளே போக முயன்றோம்.

(அப்படியாவது அனுமதி கிடைக்கும் என்பதற்காக)

அதற்கு நம்பூதிரி, திவான் வீட்டில் விருந்துண்ணும் நீங்கள் அவர் ஜாதி இல்லையானால் அதைவிட மட்டமான ஜாதியாராகத்தான் இருப்பீர்கள்; இருக்க வேண்டும். எனவேதான் அவர் வீட்டில் தங்கினீர்கள் என்று உள்ளே விடவில்லை_ தோழர்களே! ஜாதித் திமிரின் ஜம்பத்தை, மதத்தின் மமதையைப் பாருங்கள்.

அறிஞன் ஆலயம் நுழைய அருகதை....! அரச குடும்பத்தின் ஆதரவைப் பெற்ற அறிஞன் ஆலயம் நுழைய அருகதை அற்றவன் என்ன கேவலம்? இத்தகைய இந்து மதம் வேண்டாம் நமக்கு, இவைகளை ஒழிக்க வேண்டாமா? என்று குடந்தையிலே 1945_லே அண்ணா அவர்கள் சொன்னார்.

Thanks:Viduthalai

No comments: