Sunday, October 16, 2011

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 120 பிறந்தநாள் விழா

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர்,தமிழிசைச் சங்கத்தலைவர்
டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 120 பிறந்தநாள் விழா
இடம்:ராஜா அண்ணாமலை மன்றம் நாள்- 17-10-2011 நேரம் காலை 9-00 மணி

தலைமை :பேராசிரியர்.சை வே. சிட்டிபாபு MA.,BT., DLitt அவர்கள்
மற்றும் வாணியர் சங்க நிர்வாகிகள்

தமிழ் தமிழ் என்று தன் உயிர் மூச்சாய் இருப்பதுபோல் நடித்துக் கொண்டிருப்போர் மத்தியில் தான் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவராய் இருந்தபோதும் தமிழகத்தில் தமிழுக்கும் தமிழிசைக்கும் ஏற்பட்டிருந்த அவமானத்தைப் போக்க பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.அவரால் தமிழிசை வளர்ந்தது.ஒருசமயம் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டு இருந்து தமிழை புறக்கணித்துவந்த நிலையில் ஆர்.கே .எஸ் அவர்கள் ராஜா சர்.அண்ணாமலை செட்டியாருடன் இணைந்து தமிழிசை சங்கத்தை தோற்றுவித்தனர் .
தமிழிசைச்சங்கம் தோன்றியதன் காரணம் ஒரு சிறிய வரலாறு:ஆதாரம் குடியரசு பத்திரிகை 25/12/1943
தமிழ்நாட்டில் தமிழர்களிடையே தமிழில் பாட்டுப்பாட முடியாது என்று கூறும் அளவுக்குத்
துணிவு கொண்டவர் களும் இத்தமிழ்நாட்டில் இருந்து வருகின்றனர். தமிழில் தமிழ்ப்பாட்டுப் பாட
வேண்டும் என்று கேட்கும் தமிழர்களை எதிர்த்து நடக்கத் துணிவு கொண்டவர்களுக்கும் தமிழ்நாடு
இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்.
தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை நையாண்டி செய்து, அவ்வாறு கூறுவதும்
கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவு கொண்ட கூட்டத்தினருக்கும்
இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, தமிழர்கள்
வாழும் நாட்டில் தமிழில் பாடுவதற்குப் பெருஞ் செல்வர்களின்- இராஜாக்களின் முயற்சியும்
ஆதரவும் கூட்டுறவும் வேண்டப்படுகின்றன. அந்தோ! தமிழர்கள் அடைந்துள்ள கேவல நிலைமைதான்
என்னே!’ என்று 25.12.1943ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏடு மனங்கொதித்து எழுதியது.

மியூசிக் அகாதமியும் பார்ப்பனச் சூழ்ச்சியும்
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் (திசம்பரில்) சென்னை மாநகரெங்கும் இசையரங்குகள்
களைகட்டத் தொடங்கிவிடும். இராதாகிருட்டிணன் சாலையில் அமைந் துள்ள ‘மியூசிக் அகாதமி’
கட்டடம் பெரும்பாலும் இன்று பார்ப்பனர்களின் ஆளுகைக்கு உட்பட்டு உள்ளது. மியூசிக் அகாதமி
தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லை.
1927ஆம் ஆண்டு திசம்பரில் சென்னையில் இந்திய தேசியக் காங்கிரசு மாநாடு நடந்து
முடிந்தது. அந்த மாநாட்டுக்கெனத் திரட்டப்பட்ட தொகையில் செலவு போக ஒரு பகுதி
மிஞ்சியது. அந்தத் தொகையில் நிறுவப்பட்டதுதான் மியூசிக் அகாதமி. 1928ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், கர்நாடக இசையை மட்டுமன்றி செவ்வியல் நாட்டியக் கலை
எனப்படும் பரதநாட்டியத்தையும் வளர்ப்பதாகும்.
கோவில்களிலும், பண்ணையார் வீடுகளிலும் தேவ தாசிகள் எனப்பட்ட பார்ப்பனர் அல்லாத பெண்களால்
ஆடப்பட்டு வந்த சதிர் எனப்படும் பரதநாட்டிய ஆட்டம் தேவதாசி முறை ஒழிப்புக்குப்பின்
பெரும்பாலும் பார்ப்பன உயர்சாதிப் பெண் களிடமே போய்ச் சேர்ந்தது.

சர். ஆர்.கே. சண்முகம் தமிழிசைப் பணி
சர். ஆர்.கே. சண்முகம் கோவையில் ஒரு கொடைப் பண்புள்ள வளமான குடும்பத்தில் பிறந்து
வழக்கறிஞரா னவர். 1920இல் தமது 28ஆம் வயதிலேயே சென்னை சட்டமன்ற உறுப்பினர். 1923இல்
மத்திய சட்டசபைத் தேர் தலில் சுயேச்சையாய் நின்று வென்றவர். 1934இல் கொச்சி சமஸ்தானத்தின்
திவான். 1946இல் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையின் நிதியமைச்சர். பெரியாரால்
சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டப்பட்டவர்; அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்;
வகுப்புவாரிக் கொள்கை யில் பெரும் பற்றுக் கொண்டவர். கொச்சி சமஸ்தானத்தில் அதனை
நடைமுறைப்படுத்தியவர்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆர்.கே. சண்முகம் ஒருமுறை சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு
விழாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டார். அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஆண்டு விழாவைத்
தொடங்கி வைக்க அழைக்கப்பட்ட முதல் பார்ப்பனர் அல்லாத தலைவர் அவர் தான். அந்நிகழ்வில்
நிறுவனத்தின் செயலாளர் கோபால கிருஷ்ணராவ் என்பவர் தமது வரவேற்புரையில் ‘திவான் சர்.
ஆர்.கே. சண்முகம் செட்டியார் பாரத மாதாவின் அருமந்த புதல்வர்களில் ஒருவர்’ என்று
குறிப்பிட்டு வரவேற்றார்.
அங்குக் குழுமியிருந்த பார்ப்பனர்களுக்கு இப்புகழ் மொழிகளைப் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. அவர்கள் ‘அவர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூறியதை திரும்பப் பெறுங்கள்’
என இடைவிடாமல் கூச்சலிட்டனர். ‘வெட்கம்’, ‘வெட்கம்’ என்று ஒலி எழுப்பி இழிவு செய்தனர்.
தமிழிசைக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும் என்கிற அசையாத மன உறுதியோடு வினையாற்றிய ஆர்.கே.
சண்முகம் 1942இல் அண்ணாமலை அரசருடன் இணைந்து தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.
தமிழிசை வளர்ச்சிக்கும் தமிழாராய்ச்சிக்கும் தன்னேரிலாத தொண்டாற்றினார்.

சென்னையில் 4.1.1944 அன்று செயிண்ட் மேரீஸ் அரங்கில் கே.பி. சுந்தராம்பாள் பங்கேற்ற இசை
நிகழ்ச்சி ஒன்றின் பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆர்.கே. சண்முகம், “நமது
இசைவிழாவில் கலந்துகொண்ட வித்வான் களுக்கெல்லாம் நாங்கள் தனிப்படையான நன்றியைச் செலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறோம். இந்த விழாவிற்கு ஏற்பாடு கள் செய்யத் தொடங்கிய போது கச்சேரிகளில்
பாடுவதற்குப் பாடகர்கள் முன்வருவார்களோ? என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டிருந்தது. நம்முடைய
இயக்கத்திற்கு விரோதமான சில வித்வான்கள் நம்முடைய விழாவைத் தடுப்பதற்கு எவ்வள வோ
முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் நாங்கள் இதற் கெல்லாம் பயப்படவில்லை. எந்தவிதத்திலாவது
கச்சேரிகளை நடத்தி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம். எந்தப் பாடகர்களும்
வரமாட்டேன் என்று சொல்லி இருந் தாலும், கடைசி முடிவில் இராஜா சர். அண்ணாமலை செட்டி
யாரவர்களும் நானும் மேடையிலேறிப் பாடிவிடுவதென்றும் கூடத் தீர்மானித்தோம். சென்ற 12
தினங்களாக ஆயிரக் கணக்கான தமிழ் மக்களுக்கு இந்த மேடையிலிருந்து தமிழ் இசை இன்பத்தை
ஊட்டிய எல்லாப் பாடகர்களுக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்
கிறார்கள். தமிழில் கச்சேரிகள் செய்யப் போதுமான உருப் படிகள் இல்லை’ என்று சாதித்துக்
கொண்டிருக்கும் எதிரி களுக்கு நம்முடைய இசைவிழாவே தகுந்த பதில் ஆகும்” (குடிஅரசு
22.1.1944) என்றெல்லாம் பேசித் தம் தாளாத தமிழிசை வேட்கையைப் பதிவு செய்தார்.
பெரியாரும் தமிழிசையும்
எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுகிறதோ, உரிமைக்கு ஊறு நேருகிறதோ அங்கெல்லாம்
பெரியாரின் பெருங்குரல் உரத்து ஒலிக்கும். 1938இல் தமிழகம் கண்ட முதல் இந்தி எதிர்ப்புப்
போர் ஆதிக்கக் கோட்டைகளில் உடைப்பை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்டவர்கள் நிகழ்த்திய உரிமைப்
போராகும். இதே தன்மையில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழிசை இயக்கத்திற்குத்
தன் பங்களிப்பை வழங்கியுள்ளது.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார்,
ஈழத்தடிகள் போன்ற எண்ணற்ற பெருமக்கள் தாம் பணியாற்றிய தளங்களில் எதிர்எதிர் முனைகளில்
இருந்தாலும் ஆதிக்க இந்தியை எதிர்ப்பதில் ஒரே புள்ளியில் நின்றார்கள்.
1941 முதல் 1943 வரை தமிழகத்தில் வீச்சோடு முன் னெடுக்கப்பட்ட தமிழிசை இயக்கப்
பணிகளிலும் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்,
திரு.வி.க. மயிலை சிவமுத்துக்குமாரசாமி, தேவநேயப் பாவணர், மு. வரதராசனார்,
மீனாம்பாள் சிவராஜ், எம்.கே. தியாகராய பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் உள்ளிட்ட ஏராளமான
பேர் தமிழிசை இயக்கத்தை வீச்சோடு முன்னெடுத்துள்ளனர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை,
தேவக்கோட்டை, கும்ப கோணம் போன்ற இடங்களில் தமிழிசை இயக்க மாநாடு களும் கூட்டங்களும்
நடத்தப்பட்டுள்ளன.
பிறிதோர் இடத்தில் தமிழ்நாட்டில் திரைப்படம், நாடகம், பாட்டு ஆகிய மூன்று துறையும்
தமிழினத்துக்கு மிகமிகக் கேடாகிவிட்டதைச் சுட்டிக்காட்டிவிட்டு,
‘ஆகவே, மேற்கண்ட மூன்று துறைகளையும் பொது ஜனங்கள் தங்கள் தணிக்கைக்குக் கீழ் கொண்டு வந்து,
அவைகளுக்கு ஒழுங்கான முறையில் நடக்கச் செய்ய முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியமான
காரியமாகும். இதற்கு ஸ்தாபனங்கள் இருந்தால்தான் முடியும். ஆதலால் மேலே காட்டியபடி அதாவது
1. சினிமா, நாடகம் பார்க்கிறவர்கள் கழகம் (சங்கம்)
2. இசை நுகர்வோர் (பாட்டுக் கச்சேரி கேட்கிறவர்கள்) கழகம் (சங்கம்)
3. பத்திரிக்கையாளர் படிப்போர் கழகம் (சங்கம்)
என்பவைகளை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாத தாகும். (குடிஅரசு 4.12.1943)
“தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது நமது கடமை. இன்று
இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாட வேண்டியதாக
ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குத் தமிழனிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும். இது பெரிய மாறுதல்
தான்” என்று கூறும் பெரியார் தமிழிசை இயக்கத்திற்காகப் பாடுபட்ட அண்ணாமலை அரசரையும்
ஆர்.கே. சண்முகத்தையும் பாராட்டினார். அதே நேரத்தில்,
“கோடீசுவரரும் கோணாத கை கொடை வள்ளலும் மிக்க மதிவாணருமான இராஜா சர். அண்ணாமலை
அவர்களும், பேரறிஞரும் மலையாடும் படியான வாயாடிகளும் கருத்தாளர்களும் மெச்சும் மதி
அரசர் சர். சண்முகம் அவர்களும் நம் சமுதாயத்தில் 4ஆம் சாதி 5ஆம் சாதியாக மதிக்கப்படவும்,
அவ்வாறே பெரிதும் நடத்தப்படவும் காரணம் என்ன? ஏன் நடத்தப்பட வேண்டும்?” என்ற வினாவையும்
உடன் எழுப்புகிறார். அந்த அளவுக்கு ஜாதிவெறி நிலைகொண்டிருந்தது என்பதே பெரியாரின் கோபத்துக்கு காரணம்.
இந்தக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் அந்தக் காலகட்டத்தில் கோட்டீஸ்வரர்கள் அக இருந்தும் நம் தமிழுக்காக எவ்வளவு அவமான படுத்தப் பட்டார்கள்.
அதையும் தாண்டி அவர்கள் எதிர்ப்புகளை தாண்டி போரடி வெற்றிபெற்றார்கள் என்பதை ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் 120 வது பிறந்தநாளில் நம் சமுதாயம் உணர்ந்து நாமும் தமிழ் சமுதாயத்திற்கு கடமையாற்ற உறுதி கொள்ள வேண்டும் .

No comments: