Wednesday, October 28, 2009

தினமணியில் ஆர் கே சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டுச் செய்தி

கோவை, அக். 26: இந்தியாவின் வளர்ச்சிக்கு, முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் முக்கிய பங்காற்றினார் என சக்தி குழுமங்களின் தலைவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் புகழாரம் சூட்டினார். கோவை தொழில்வர்த்தக சபை அரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆர்.கே.சண்முகம் பற்றிய நூலை வெளியிட்டு அவர் பேசியது: கோவையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த சண்முகம் செட்டியார், முன்னணி தொழில்அதிபர், கோவையை முன்னேற்ற முக்கிய பங்காற்றியவர், நாட்டின் முதல் நிதி அமைச்சர், சிறந்த பொருளாதார மேதை என பன்முகத் தன்மை உடையவராக உயர்ந்தவர்.அருங்காட்சியகம் அமைக்கலாம்: கோவையில் நூற்பாலையை உருவாக்கிய முதல் இந்தியர் அவர் தான். காந்தியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். சென்னை தமிழ்ச் சங்கம், பேரூர் தமிழ் கல்லூரி உள்ளிட்டவற்றை உருவாக்க முக்கிய பங்காற்றினார். பொருளாதாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த பலமுறை வெளிநாடு சென்றுள்ளார். அவரது நினைவாக கோவையில் ஏதாவது முக்கிய இடத்தில் அருங்காட்சியகம், நூலகம் அமைக்க தொழில்அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். சண்முகம் செட்டியாரின் பேரன் ஆர்.சுந்தர்ராஜ் அவிநாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால், சண்முகம் செட்டியார் எழுதிய 40 ஆயிரம் கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தில்லியில் உள்ள தேசிய ஆய்வுக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை மையமாக வைத்து பல வெளிநாட்டு மாணவ, மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக தொழில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதில் தலைவராக இருந்த சண்முகம் செட்டியார், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கைப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்தியா பலதுறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2-வது உலக தமிழ் மாநாடு சென்னையில் நடக்கும்போது அவருக்கு சிலை வைக்க அண்ணா முயற்சி எடுத்தார். ஆனால், சிலரின் தவறான ஆலோசனையால் அது கைவிடப்பட்டது. கோவையில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடைபெறும் நிலையில் இங்கு சிலை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்திய தொழில்வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் மகேந்திரா ராம்தாஸ், செயலர் டி.நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
நன்றி-

No comments: